கட்டாய கொரோனா பரிசோதனையால் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பாதிப்பா?
- இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தூரில், ஜனவரி 7-ந் தேதி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது.
புதுடெல்லி :
சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
அதனால், இந்தியா கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு சர்வதேச விமானத்தில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்காவது கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த உத்தரவு, சென்னை உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் கடந்த சனிக்கிழமை அமலுக்கு வந்தது.
இந்த நடவடிக்கை, இந்தியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில், பண்டிகை விடுமுறைக்கு இந்தியா வர திட்டமிட்டிருந்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பயண திட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், ஜனவரி 7-ந் தேதி, வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மாநாடு தொடங்குகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை செய்து, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அங்கு செல்ல திட்டமிட்டு இருந்த இந்தியர்கள், விமான டிக்கெட் முன்பதிவு செய்து விட்டனர். இந்தூரில் தங்கும் விடுதியையும் முன்பதிவு செய்து விட்டனர். இந்த நேரத்தில், இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் இந்திய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் அங்குர் வைத்யா, தாங்கள் குழப்பத்தில் இருப்பதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள பீகார் அறக்கட்டளையின் தலைவர் அலோக் குமாரும் இதே கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதே சமயத்தில், இந்த மாநாட்டை தவிர்த்து, விடுமுறையை கழிக்க வர வேண்டிய இந்தியர்கள், ஏற்கனவே குடும்பத்துடன் வந்திருப்பார்கள் என்றும், அவர்களுக்கு இந்த உத்தரவால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், சீனாவில் கொரோனாவால் இந்தியர்களும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அங்கிருந்து யாரும் இந்தியா வர வாய்ப்பில்லை என்று தெரிகிறது.