மகாராஷ்டிர துணை முதல்வர் மனைவி பற்றி அவதூறு கருத்து: 53 போலி பேஸ்புக் கணக்கு தொடங்கிய பெண் கைது
- மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
- 2 ஆண்டுகளாக அம்ருதா பட்னாவிஸ் பற்றி கீழ்த்தரமான முறையில் அவதூறு கருத்துக்கள் பகிர்ந்துள்ளார்
மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ்.இவரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் அவர் குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளாலும் கருத்துக்கள் பகிரப்பட்டது.
இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்ம்ருமிதி பன்சால் என்ற பெண் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பல்வேறு வழக்குகளின் கீழ் அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர். அப்போது ஸ்ம்ருமிதி பன்சால் 53 போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி கடந்த 2 ஆண்டுகளாக அம்ருதா பட்னாவிஸ் பற்றி கீழ்த்தரமான முறையில் அவதூறு கருத்துக்கள் பகிர்ந்து வந்தததும், 13 போலி இ-மெயில் கணக்கு தொடங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எதற்காக அந்த பெண் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நாளை வரை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.