அரசு பஸ்ஸில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. அடித்து நொறுக்கப்பட்ட புனே பேருந்து நிலையம்
- அவர்களுக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது என்று கூறி ஏறச்செய்துள்ளார்.
- காவல் துறை சோதனைச்சாவடிக்கு அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
மகாராஷ்டிராவில் புனே நகர பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலையில் தனது சொந்த ஊருக்கு செல்ல அந்த 26 பெண் காத்திருந்தபோது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
போலீசார் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:45 மணியளவில், சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பால்டானுக்குச் செல்லும் பேருந்துக்காக அவர் காத்திருந்தார். அப்போது நபர் ஒருவர் பெண்ணிடம் வந்து பேச்சுக்கொடுத்துள்ளார். சதாராவுக்கான பேருந்து வேறொரு நிறுத்தத்தில் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் அவர் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காலியான ஏசி பேருந்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். பேருந்தின் உள்ளே விளக்குகள் எரியாததால் பேருந்தில் ஏற அந்த பெண் முதலில் தயங்கி உள்ளார். பேருந்தில் விளக்கு இல்லையே என அந்த பெண் கூற, அதற்கு அந்த நபர், மற்ற பயணிகள் தூங்கிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இடைஞ்சல் இருக்கக் கூடாது என்பதற்காகவே விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது என்று கூறி ஏறச்செய்துள்ளார்.
அப்பெண் உள்ளே செல்ல, பின்தொடர்ந்த அந்த நபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பேருந்து வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் அந்த நபரின் பெயர் தத்தாத்ரேய ராமதாஸ் (36 வயது) என்பதும் அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவர் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தவர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து துணை காவல் ஆணையர்(டி.சி.பி.) ஸ்மார்த்தா பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்டவருடன் அந்தப் பெண் பேருந்தை நோக்கி நடந்து செல்வது பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்து நிலைய வளாகத்தில் ஏராளமான மக்களும், ஏராளமான பேருந்துகளும் இருந்ததாக தெரிவித்தார்.
சம்பவம் நடந்த உடனேயே அந்தப் பெண் காவல்துறையை அணுகவில்லை, பால்டானுக்கு ஒரு பேருந்தில் ஏறி, பயணத்தின் போது தொலைபேசியில் தனது தோழியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். தனது தோழியின் அறிவுரையின் பேரில், காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டி.சி.பி.ஸ்மார்த்தா பாட்டீல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. காவல் துறை சோதனைச்சாவடிக்கு அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக அரசுக்கு எதிராக சம்பவம் நடந்த பேருந்து நிலையத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து போராட்டம் நடத்தினர். அங்குள்ள அலுவலகத்தை அவர்கள் அடித்து நொருக்கிறனர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் சகோதரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, துயரமானது, கோபத்தை ஏற்படுத்துகிறது.
அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. தூக்கிலிடப்படுவதைத் தவிர வேறு எந்த தண்டனையும் இதற்கு ஏற்புடையதாக இருக்காது. குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்ய புனே காவல் ஆணையரை தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.