புதுச்சேரி
புதுச்சேரியில் புயலால் 3 ஆயிரம் டன் குப்பை குவிந்தது
- குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த 3 நாட்களில் மட்டும் 1600 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 1-ந் தேதி ஃபெஞ்ஜல் புயல், கனமழை காரணமாக நகரம், கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.
பலத்த காற்று வீசியதால் சாலையோரத்தில் இருந்த 500-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்தது. இதை தீயணைப்பு துறையினர், வருவாய், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பொக்லைன் மற்றும் மரம் வெட்டும் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றி சாலையோரம் குவித்தனர்.
மழை நின்றதால் மரங்கள், இதர குப்பைகளை அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குப்பை அள்ளும் ஒப்பந்த நிறுவனங்கள் கூடுதலாக வாகனங்களை வைத்து குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
புயலால் புதுவை நகரம், கிராமப்புற பகுதிகளில் 3 ஆயிரம் டன் குப்பைகள் சேர்ந்துள்ளது.
கடந்த 3 நாட்களில் மட்டும் 1600 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.