புதுச்சேரி

பாலம் சீரமைப்பு பணி 12 மணி நேரத்தில் முடிந்தது- நாளை போக்குவரத்து தொடங்கும்

Published On 2024-12-06 10:08 GMT   |   Update On 2024-12-06 10:08 GMT
  • விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
  • பாலம் சீரமைப்பு பணிகள் முடிந்தாலும் உடனடியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

புதுச்சேரி:

ஃபெஞ்ஜல் புயல் தமிழகத்தை தாக்கியதால் அங்கு வரலாறு காணாத மழை பொழிந்தது.

வீடூர், சாத்தனூர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதில் உபரி நீர் திறக்கப்பட்டதில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கின. அன்று மாலை கடலூர்-புதுவை சாலை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் கடலூர்-புதுவை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம் வடிந்ததால், மாலை 3 மணிக்கு பிறகு கடலூர்-புதுவை இடையே நேரடி போக்குவரத்து தொடங்கியது.

ஆனால் இரவு 10 மணிக்கு, தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தில் ஓடைப்பாலம் உள்வாங்கியது. இதனால், புதுவை- கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடலூர் சென்ற அனைத்து வானங்களையும், முருங்கப்பாக்கம் சந்திப்பு, கொம்பாக்கம், வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம் வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.

பாலம் உள்வாங்கியதால் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி, அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து நேற்று காலை உடைந்த பாலத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ரூ.40 லட்சத்தில் உடனடியாக சீரமைக்கும் பணியை தொடங்கினர்.

பாலம் சீரமைக்கும் பணியினை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாலத்தின் முக்கியத்துவம், சேதத்திற்கான காரணம் குறித்து கவர்னரிடம் விளக்கினார்.

நேற்று மாலை வரை பணிகள் தொடர்ந்தது. பணிகள் நிறைவடையும் வரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அங்கேயே இருந்து பணிகளை பார்வையிட்டு, தேவையான உத்தரவுகளை பிறப்பித்தார். பாலம் சீரமைப்பு பணிகள் முடிந்தாலும் உடனடியாக போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

கான்கிரீட் உறுதித்தன்மை அடைவதற்காக கால அவகாசம் தேவைப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) மதியம் முதல் கடலூர் சாலையில் போக்குவரத்தை தொடங்கலாம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் இலகுரக வாகனங்களை இயக்கி பார்த்து பரிசோதனை செய்துவிட்டு, பின்னர் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News