null
புதுச்சேரி பகுதிகளில் மத்திய குழு ஆய்வு
- புயல் சேதத்தை பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
- முதல் குழு புதுச்சேரி நகராட்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது.
புதுச்சேரி:
ஃபெஞ்ஜல் புயல் புதுச்சேரியில் கடும் பாதிப்பினை ஏற்படுத்தியது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கன மழையால் 4 பேர் உயிரிழந்தனர்.
புயல் சேதத்தை பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய குழுவினர் கடலூர், கள்ளகுறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். கடலுார் மாவட்டம், நெய்வேலியில் இரவு தங்கினர்.
அடுத்த கட்டமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளை (திங்கட்கிழமை) என, 2 நாட்கள் மத்திய இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில், மத்திய குழு புதுச்சேரியில் புயல், மழை சேதத்தை ஆய்வு செய்ய உள்ளது.
மதியம் 2.30 மணிக்கு புதுச்சேரி முள்ளோடைக்கு வரும் மத்திய குழுவிற்கு புதுச்சேரி அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 2 பிரிவுகளாக பிரிந்து புதுச்சேரியில் ஆய்வு செய்கின்றனர்.
முதல் குழு புதுச்சேரி நகராட்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறது. 2-வது குழு பாகூர் தாலுகா, முள்ளோடை, கொம்மன் தான்மேடு, பரிக்கல்பட்டு, பாகூர், இருளன் சந்தை, சோரியாங்குப்பம், குருவி நத்தம், மணமேடு, பனையடிக்குப்பம், பண்டசோழநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்க உள்ளது. இரவு ஓட்டல் அக்கார்டில் மத்திய குழு தங்குகிறது.
நாளை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை மீண்டும் 2 பிரிவுகளாக பிரிந்து மத்திய குழு ஆய்வு செய்கிறது. முதல் குழு வில்லியனூர் தாலுகா பகுதிகளிலும், 2-வது குழு உழவர்கரை பகுதிகளிலும் ஆய்வு செய்கிறது. 11.30 மணியளவில் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசனை நடத்தும் குழுவினர் மதியம் 2 மணியளவில் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர்.