புதுச்சேரி

புத்தாண்டுக்கு தயாராகும் புதுச்சேரி- மீண்டும் மிரட்டும் மழையால் சுற்றுலா பயணிகள் அச்சம்

Published On 2024-12-11 05:09 GMT   |   Update On 2024-12-11 05:09 GMT
  • புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • புத்தாண்டுக்கு கூடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புத்தாண்டு கொண்டாட்ட நகரமாக புதுவை மாறியுள்ளது.

நாடு முழுவதும் இருந்து புத்தாண்டை கொண்டாட டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் முதல் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி விடுவர். சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். இதற்கான முன்பதிவு நவம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடும்.

விடுதிகள், திறந்தவெளி மைதானங்களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் புதுவையில் பிரம்மாண்டமான வர்த்தகம் நடைபெறும்.

தானே புயல் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வீசியது. அந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் சீர்குலைந்தது. தற்போது ஃபெஞ்சல் புயல் புதுவையை தாக்கியுள்ளது. புயல் தாக்கி 10 நாட்களாகியதை தொடர்ந்து புதுச்சேரி மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது.

புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொது நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன் அனுமதி பெற வேண்டும்.

இதற்காக வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு கூடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது ஃபெஞ்சல் புயலில் மீண்டு புத்தாண்டுக்கு தயாராகி வரும் புதுச்சேரி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News