புதுச்சேரி

புதுச்சேரியில் மீண்டும் தொடர் மழை- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Published On 2024-12-11 05:15 GMT   |   Update On 2024-12-11 05:15 GMT
  • வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர்.
  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புதுச்சேரி:

கடந்த நவம்பர் 30-ந்தேதி புதுச்சேரியை தாக்கிய ஃபெஞ்சல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. புதுவை நகர், புறநகர், கிராமபுறங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் சாய்ந்தது. துணை மின்நிலையங்களில் வெள்ளம் புகுந்தது.

ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அனைத்து கால்வாய்கள், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 50கி.மீ.க்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளது.

வெள்ள சேதத்தை மதிப்பிட நேற்று முன்தினம் மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர். நகர பகுதி ஓரிருநாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமப்புறங்களில் சாத்தனூர், வீடூர் அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளவில்லை.

இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு புதுவையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்றைய தினமே வானம் கருமேகங்களுடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை மேகங்கள் திரண்டு வானம் இருண்டு காணப்பட்டது. காலை 7.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேல் கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்தவண்ணம் உள்ளது.

இதனால் மீண்டும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் பகுதிகளில் ஏற்கனவே பெய்த புயல் மழையில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்திருந்த நிலையில் மீண்டும் இன்று பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கி வருகிறது.

இதே போல் தற்காலிக பஸ் நிலையத்திலும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதனிடையே புதுவை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது. சப்-கலெக்டர்கள் சோமசேகர் அப்பாராவ், இசிட்டா ரதி, அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறை மூலம் தேவையான இடங்களில் அதிகளவு மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஜே.சி.பி. எந்திரம், மோட்டார் பம்புகளை தயார்நிலையில் வைக்க வேண்டும். பேரிடர் காலத்தில் அதிகாரிகள் விரைவாக பணியாற்ற வேண்டும்.

தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி உணவு வழங்க வேண்டும். தாழ்வான பகுதிகள் அனைத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அணைகள் திறக்கப்படும்போது முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தாழ்வான பகுதியில் வசிப்போரை பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும்.

தாசில்தார்களுக்கு வயர்லெஸ் வழங்கப்படும். மழைக்காலங்களில் அதிகாரிகள் அதை பயன்படுத்தி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு வரவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News