சுந்தரா அஸ்வினா? ஹர்சித்தா ஆகாஷா? ஆடும் லெவனில் இடம் பிடிப்பது யார்?
- இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.
- இந்த போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த போட்டியில் விளையாடிய போலண்ட்டுக்கு பதிலாக ஹசில்வுட் இடம் பெற்றுள்ளார். மற்றபடி அந்த அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சுந்தர் 2 விக்கெட்டும் 29 ரன்கள் விளாசினார். ஆனால் அஸ்வின் 2-வது டெஸ்ட்டில் பேட்டிங், பந்து வீச்சில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவருக்கு பீல்டிங்கில் தடுமாறுவதாலும் அவருக்கு பதில் சுந்தரை ஆடும் லெவனில் எடுக்க வாய்ப்புள்ளது.
பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து வேகத்துடன் நன்கு பவுன்சும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2-வது டெஸ்ட்டில் ஹர்சித் ரானா விக்கெட்டுகளை வீழ்த்த கஷ்டப்பட்டார். மேலும் ரன்களை வாரி வழங்கினார். இதனால் இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.