சையத் முஷ்டாக் அலி: ரகானே அதிரடியால் 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை
- மும்பை அணியில் ரகானே 84 ரன்கள் குவித்தார்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் மும்பை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன. இதில் இன்று காலை நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தி மத்திய பிரதேசம் அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பரோடா - பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பரோடா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய பெங்கால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 131 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பரோடா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்ற காலிறுதி ஆட்டத்தில் விதர்பா - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. அதர்வ தைடே, வான்கடே ஆகியோர் அரை சதம் விளாசினர்.
இதனை தொடர்ந்து விளையாடிய மும்பை அணியில் ரகானே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 45 பந்தில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் மும்பை 224 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரகானே தட்டிச்சென்றார்.
இதன் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதிக்கு 3-வது அணியாக மும்பை முன்னேறி உள்ளது.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் டெல்லி - உத்தர பிரதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 4-வது அணியாக இடம் பெறும்.