ரஞ்சி டிராபி இறுதிப்போட்டி: 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் கேரளா 131/3
- விதர்பா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்கள் சேர்த்தது.
- கேரளா அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது.
ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதுகின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவார் 153 ரன்களும் கருண் நாயர் 86 ரன்களும் எடுத்தனர். கேரளா அணி தரப்பில் நிதீஷ் மற்றும் ஈடன் ஆப்பிள் டாம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நெடுமான்குழி பாசில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் முதல் இன்னிங்சைத் தொடங்கிய கேரளா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோஹன் குன்னுமால் ரன்கள் ஏதுமின்றியும், அக்ஷய் சந்த்ரன் 14 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ஆதித்ய சர்வதே - அஹ்மத் இம்ரான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்த ஜோடி 90 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் அஹ்மத் இம்ரான் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ஆதித்யா தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் கேரளா அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஆதித்யா சர்வதே 66 ரன்களுடனும், கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
விதர்பா அணி தரப்பில் தர்ஷன் நல்கண்டே 2 விக்கெட்டுகளையும், யாஷ் தாக்கூர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து 248 ரன்கள் பின் தங்கிய நிலையில் கேரளா அணி நாளை 3-ம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.