கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: பயிற்சியை தவிர்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா.. அதிர்ச்சி தகவல்

Published On 2025-02-27 12:48 IST   |   Update On 2025-02-27 12:48:00 IST
  • இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது.
  • பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அரையிறுதி சுற்று வாய்ப்பை இந்திய அணி உறுதிப்படுத்தி விட்டது. இந்த நிலையில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி வருகிற மார்ச் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.

முன்னதாக கடந்த 23-ம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.

ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. இதையடுத்து இரு அணிகள் மோதும் போட்டிக்காக இந்திய அணியினர் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அகாடமியில் நடைபெற்ற பயிற்சியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது. மற்ற வீரர்கள் அனைவரும் பயிற்சி செய்த நிலையில், ரோகித் சர்மா மட்டும் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த சோஹம் தேசாய் மேற்பார்வையில் ஓட்டப் பயிற்சி (ஜாகிங்) செய்ததாக தெரிகிறது. மேலும், அப்போதும் கூட அவர் உடல் இயல்பான அளவுக்கு அசையவில்லை என்று கூறப்படுகிறது.

தொடரின் இரு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபடவில்லை என்று தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News