முதல் டி20 போட்டியில் பாபர் அசாம் டக் அவுட்: 11 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
- முதலில் விளையாடி தென் ஆப்பிரிக்கா அணி 183 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டர்பன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 40 பந்தில் 82 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, அப்ரார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ரிஸ்வான் 74 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து சொதப்பி வரும் பாபர் அசாம் இந்த போட்டியில் டக் அவுட் ஆனார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி வரும் 13-ம் தேதி சென்சூரியனில் நடைபெறுகிறது.