கிரீவ்ஸ் அசத்தல் சதம்: முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 450 ரன்களுக்கு டிக்ளேர்
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 450 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
- அந்த அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான மைக்கேல் லூயிஸ் பொறுப்புடன் ஆடினார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த மைக்கேல் லூயிஸ், கவெம் ஹோட்ஜ் ஜோடி 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹோட்ஜ் 25 ரன்னில் வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு மைக்கேல் லூயிஸ் உடன் அலிக் அத்தான்ஸ் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி ரன்களை சேர்த்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மைக்கேல் லூயிஸ் 97 ரன்னில் அவுட்டானார். இந்த ஜோடி 140 ரன்களை எடுத்தது. அலிக் அதான்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுக்கு 250 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஜஸ்டின் கிரீவ்ஸ் நிதானமாக ஆடினார். அவருக்கு கீமர் ரோச் ஒத்துழைப்பு அளித்தார். கிரீவ்ஸ் சதமடித்து அசத்தினார்.
8-வது விக்கெட்டுக்கு இணைந்த கிரீவ்ஸ், கீமர் ரோச் ஜோடி 140 ரன்களை சேர்த்த நிலையில், கீமர் ரோச் 47 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கிரீவ்ஸ் 115 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வங்கதேசம் சார்பில் ஹசன் மகமுது 3 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.