செய்திகள்

டெங்கு ஆய்வுப்பணிக்கு வந்த கலெக்டரை தடுத்து நிறுத்தி பெண் வாக்குவாதம்

Published On 2017-10-24 12:14 GMT   |   Update On 2017-10-24 12:27 GMT
வேலூர் மாவட்டத்தில் சி.எம்.சி. காலனி பகுதியில் டெங்கு ஆய்வுப்பணிக்கு வந்த கலெக்டரை தடுத்து நிறுத்தி பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து கலெக்டர் ராமன் மற்றும் வருவாய்த்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருமண மண்டபங்கள், ஆஸ்பத்திரி, பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது.

இதுவரை சுமார் 14 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி, சி.எம்.சி. காலனி பகுதியில் கலெக்டர் ராமன் இன்று காலை ஆய்வு செய்தார்.

அங்கிருந்த கார் பார்க்கிங் பகுதியில் கொசு உற்பத்தியானது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் செட்டுக்கு ரூ.25 அயிரம் அபராதம் விதித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், மாநகராட்சி கமி‌ஷனர் குபேந்திரன், தாசில்தார் பாலாஜி, உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சி.எம்.சி. காலனியில் உள்ள ஒரு வீட்டில் உள்ள கிணற்றை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். அந்த வீட்டில் இருந்த பெண் டாக்டர் ஜுடித் (வயது 30) எங்கள் வீட்டிற்குள் வர உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? அனைவரும் வெளியே செல்லுங்கள் என்றார்.

அதற்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்திருப்பதாக சுகாதார குழுவினர் பதில் கூறினர். ஆனால் அவர் கடுமையாக பேசினார். அதிகாரிகள் அவரை எச்சரித்து விட்டு சென்றனர்.

இதுகுறித்து சுகாதார மேற்பார்வையாளர் சசிகுமார் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதில் சி.எம்.சி. காலனியில் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கு சென்ற போது அங்கிருந்த பெண் ஒருவர் அதிகாரிகள் என தெரிந்தும் பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசினார்.

மேலும் அரசு பணி செய்யவிடாமல் தடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீரத் வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

Similar News