30 ஆண்டுகளில் புழல் நீர்ப்பிடிப்பு பகுதியில் 3 மடங்கு ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு- ஆய்வு
- புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.
செங்குன்றம்:
சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.
புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.
இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.
புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.
இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.