தமிழ்நாடு

போதமலைக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச்சுமையாக நடந்தே கொண்டு சென்ற ஊழியர்கள்

Published On 2024-04-18 03:53 GMT   |   Update On 2024-04-18 03:53 GMT
  • போதமலை தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
  • இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. கரடு முரடான பாதைகளில் தான் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமையாக தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெடமலையில் ஒரு வாக்குச் சுவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும் 417 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் கெடமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 159 ஆண்களும் 138 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் மொத்தம் 1142 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இன்று காலை மேற்கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட்ரோல் யூனிட் உள்பட 5 எந்திரங்களை மண்டல அலுவலர் விஜயகுமார், உதவி மண்டல அலுவலர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள்பட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உள்பட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொதுமக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அதேபோல் கெடமலை வாக்குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட 5 எந்திரங்களும் நடந்தே கொண்டு செல்லப்பட்டன. மண்டல அலுவலர் பழனிச்சாமி, உதவி மண்டல அலுவலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீசார் உள்பட 10 பேர் சென்றனர். 

Tags:    

Similar News