தமிழ்நாடு

தீப்பிடித்து எரிந்த தனியார் பஸ்.

எடப்பாடியில் இருந்து சேலம் வந்த தனியார் பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு- 40 பயணிகள் உயிர் தப்பினர்

Published On 2023-08-12 07:32 GMT   |   Update On 2023-08-12 07:33 GMT
  • பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டனர். இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
  • சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் உயிர்தப்பினர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து இன்று மதியம் 12 மணி அளவில் சேலம் நோக்கி ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் குமார் (40) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக திருநாவுக்கரசு (35) என்பவர் பணியாற்றினார். பஸ் எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை ரிங்-ரோடு என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம்போட்டனர். இதனால் சுதாரித்து கொண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் பயணிகள் பஸ்சில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் முன்பகுதியிவ் கொட்டி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து எடப்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் பஸ்சில் எரிந்த தீயை பொதுமக்கள் அணைத்துவிட்டனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பஸ்சில் பயணம் செய்த 40 பயணிகள் உயிர்தப்பினர். இந்த சம்பவம் காரணமாக அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News