2 கை-கால்கள் செயலிழந்தும் 420 மதிப்பெண் பெற்ற மாணவன்- சிறந்த வக்கீலாவதே குறிக்கோள்
- குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பாப்பா. இவர்களது 2-வது மகன் தமிழ்ச்செல்வன்.
2 கை மற்றும் கால்கள் ஆகியவை போலியோவால் பாதிக்கப்பட்டதால், மற்ற மாணவர்கள் போன்று செயல்படும் நிலை இல்லாமல் இருந்து வருகிறார். பிறவியிலேயே இந்த பாதிப்பு இருந்தாலும் படிப்பு ஒன்று தான் முக்கியம் என அவர் கருதியதால் அவரது பெற்றோர் அவருக்கு கல்வியை கற்க அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அந்த மாணவன் ஆசிரியர் உதவியுடன் எழுதினார். இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவன் தமிழ்ச்செல்வன் மொத்தமாக 500-க்கு 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இதுகுறித்து மாணவர் கூறும் போது, தொடர்ந்து படித்து சிறந்த வக்கீலாக வேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார்.
ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியை கண்ணாக கொண்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்து மாணவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.