தமிழ்நாடு

அதிகாரிகளுடன் வாக்குவாதம்- சிதம்பரம் தீட்சிதர்கள் மீது போலீசில் புகார்

Published On 2023-06-25 09:58 GMT   |   Update On 2023-06-25 09:58 GMT
  • 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள்.
  • நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது.

கோவிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏரி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும். அதன்படி கோவில் பொது தீட்சிதர்கள் இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் 27-ந் தேதி வரை கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என பதாகை வைத்தனர்.

இது குறித்து கோவிலிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட தர்ஷன் தீட்சிதர் அளித்த புகாரின் பேரில் இந்து அறநிலையத்துறையினர், போலீசாருடன் நேற்று மாலை கோவிலுக்கு வந்து விளம்பர பதாகையை அகற்றி, பக்தர்களை அனுமதிக்குமாறு கோரினர்.

அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தொன்று தொட்டு நடைபெற்று வரும் நடைமுறை இது. இதனால் எங்களது உற்சவம் பாதிக்கும் என்பதால் பதாகையை அகற்ற மறுத்தனர். அப்போது அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவராம தீட்சிதர் தெரிவித்ததாவது:-

தேர் மற்றும் தரிசனத்திற்கு கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை கனகசபையில் எழுந்தருள செய்தும், 6-ம் கால பூஜை செய்து தேர் மற்றும் தரிசனத்திற்கு வெளியே வருவார்கள். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனசபையில் சாமி தரிசனத்திற்கு ஏற்றுவது வழக்கம் கிடையாது.

நாங்கள் வைத்த போர்டை அறநிலையத் துறையினர் அழித்துள்ளனர். மேலும் எங்களது உற்சவ பணியை செய்யவிட்டாமல் அறநிலையத்துறை செயல் அலுவலர் ஈடுபட்டு வருகிறார். மன நெருக்கடியை உருவாக்கி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை தில்லையம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா கூறுகையில் எங்களை பணி செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுத்து விட்டனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என கூறினர்.

Tags:    

Similar News