ஊருக்குள் நுழைய முயன்ற அரிசி கொம்பன் யானை- வனத்துறையினர் தடுத்து காட்டுக்குள் அனுப்பினர்
- ரேடியோ காலர் கருவி மூலம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
- அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.
நாகர்கோவில்:
கேரள மாநிலம் சின்னக்கானல் பகுதியிலும் தமிழகத்தின் தேனி மாவட்டம் குமுளி பகுதியிலும் அரிசி கொம்பன் யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.
இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அரிசி கொம்பன் யானையை பிடித்தனர். பின்னர் அந்த யானையை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டன் துறை புலிகள் சரணாலயத்தில் அப்பர் கோதையாறு பகுதியில் கொண்டுவிட்டனர்.
அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட யானை அந்தப் பகுதியிலேயே சுற்றி திரிந்து வருகிறது. முத்துக்குளிவயல் பகுதியில் இயற்கை உணவுகள் அதிக அளவு கிடைத்து வருகிறது. தண்ணீரும் கிடைப்பதால் யானை அந்த பகுதியை விட்டு நகராமல் அங்கேயே உள்ளது. விடப்பட்ட இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே யானை சுற்றி வருகிறது.
யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் கருவி மூலம் நெல்லை மற்றும் குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். கால்நடை மருத்துவர்கள், வனத்துறை ஊழியர்கள் அங்கேயே முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. யானையின் உடல் மாற்றத்திற்கு காரணம் அதனுடைய உணவு பழக்க வழக்கமே என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஏற்கனவே அரிசி கொம்பன் யானை அரிசி, வெல்லம், கரும்பு போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தது. தற்பொழுது விடப்பட்டுள்ள பகுதியில் இயற்கை உணவை மட்டும் சாப்பிட்டு வருவதால் உடல் மெலிந்திருப்பதாக தெரிவித்தனர். யானையின் சாணத்தை மருத்துவ குழுவினர் தினமும் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். யானை உட்கொள்ளும் உணவு சரியான முறையில் செரிமானம் ஆகி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. யானையின் உடல் குன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி கொம்பன் யானையை மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். ஒரு சில வாரங்களில் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் அரிசி கொம்பன் யானை ஏற்கனவே சாப்பிட்டு வந்த அரிசி, கரும்பு, வெல்லம் போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்காததால் அது மீண்டும் ஊருக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அரிசி கொம்பன் யானையை பொருத்தமட்டில் தீயை பார்த்தால் மட்டுமே அங்கிருந்து சென்றுவிடும் என்று கூறப்படுகிறது. ஊருக்குள் வரும் வழித்தடங்களில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு அந்த பகுதிக்கு யானை வரும் போது தீயை வைத்து யானையை மீண்டும் காட் டுக்குள் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரிசி கொம்பன் யானையின் உடல் மெலிந்து விலா எலும்புகள் தெரிவது போன்று சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உணவுப் பழக்க வழக்கத்தின் காரணமாக உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை தான். தற்பொழுது அரிசி கொம்பன் யானை இயற்கையான உணவை சாப்பிட்டு வருகிறது. தினமும் யானையை கண்காணித்து வருகிறோம். ஏற்கனவே 2 முறை மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து காட்டுக்குள் கொண்டு விட்டு உள்ளோம். யானை விடப்பட்ட ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் தான் சுற்றி வருகிறது. திட காத்திரமாக நல்ல நிலையில் அரிசி கொம்பன் யானை உள்ளது என்றார்.