தமிழ்நாடு

அண்ணாமலையை அரசியல் கோமாளி என விமர்சித்த விவகாரம்- அமைச்சர் பேச்சுக்கு அர்ஜூன் சம்பத் கண்டனம்

Published On 2022-11-03 04:12 GMT   |   Update On 2022-11-03 04:12 GMT
  • சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
  • அமைச்சர் செந்தில்பாலாஜியை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

கோவை:

கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந் தேதி கார் வெடித்து ஒருவர் பலியானார். இந்த கோவிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் அங்கு பக்தர்களுடன் அமர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடினார்.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி பாடும் பா.ஜ.க. மாநில தலைவர் அரசியல் கோமாளி என விமர்சித்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒருமுறை கூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது இல்லை போலிருக்கிறது.

இந்த கோவிலில் மூலவர் சங்கமேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இவர்கள் சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. இதை சோமாஸ்கந்தர் வடிவம் என்பவர்.

சுப்பிரமணிய சுவாமி கருவறையில் 6 முகங்களுடன் 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

நாட்டில் வேறு எங்கும் இப்படி ஒரு தோற்றத்தை காண முடியாது. இந்த கோவில் முருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் இப்போது தான் நடந்து முடிந்துள்ளது. முருகனுக்கு தைப்பூச தேரோட்டமும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இதை அறியாமல் ஈஸ்வரன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி பேசி இருக்கிறார்.

மிகவும் சக்தி வாய்ந்த வரலாற்று பெருமைமிக்க இந்த திருக்கோவில் குறித்து எதுவும் தெரியாமல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவரை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் அமைச்சர் பேசியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மன்னிப்பு கோர வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News