செயற்கை நுண்ணறிவு: போலியான மனிதர்களை உருவாக்கி வீடியோ காலில் பேசி ஏமாற்றி திடுக்கிட வைக்கும் துணிகர மோசடி
- ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது.
- www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.
சென்னை:
ஏ.ஐ. என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
இதன் மூலமாக மனிதர்களை போன்று மாற்று உருவத்தை உருவாக்க முடியும் என்பதை பயன்படுத்தி போலியான நபர்களை உருவாக்கி திடுக்கிட வைக்கும் துணிகர மோசடி அரங்கேற தொடங்கி இருப்பதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
டீப்பேக் தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது.
ஆரம்பத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் திரைப்படத் தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களை காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப் போல சித்தரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், குற்றவாளிகள் இந்த சக்தியைப் தவறாகப் பயன்படுத்த முற்படுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது அரங்கேற தொடங்கி உள்ளது.
மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல் ஒரு போலி கணக்கை உருவாக்குகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவரிடம் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர்.
ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது. வீடியோவை கையாளுதலுடன் கூடுதலாக, மோசடி செய்பவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல் தொகுப்பைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் குரலைப் பிரதிபலிக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு வீடியோ அழைப்பு மோசடிகளை எவ்வாறு தடுப்பது என சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் குமார் கூறியதாவது:-
தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் எனக் கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பைப் பெறும்போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும்.
ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்கள் தகவலுக்கான அணுகலைக் கட்டுப் படுத்த சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரிசெய்யவும்.
அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, பல காரணி அங்கீகாரம் மற்றும் பிற அடையாளச் சரிபார்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும்.
நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.
சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.
மோசடி நடந்த தளத்தை தொடர்பு கொண்டு மோசடி செய்தவரின் சுயவிவரத் தகவல் மற்றும் நீங்கள் சேகரித்த ஆதாரங்கள் உட்பட அனைத்து தொடர்புடைய விவரங்க ளையும் அவர்களிடம் வழங்கவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருப்பதாகவும் அதன் காரணமாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.