ராமேசுவரத்தில் 3 இடங்களில் திடீரென உள்வாங்கிய கடல்- படகுகள் தரைதட்டி நின்றது
- திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது.
- கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த கடலுக்கு நீராட வந்தனர். அப்போது திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. பக்தர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து பக்தர்கள் புனித நீராடினர்.
இதேபோல் ராமேசுவரத்தில் உள்ள ஓலைக்குடா, சங்குமால் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டியது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது. அதிகாலையில் கடலில் நீரோட்டம் மாறுபடுவதால் இதுபோன்று நடக்கிறது. சில நிமிடங்களில் கடல் இயல்பு நிலைக்கு மாறிவிடும். இது வழக்கமான ஒன்றுதான் என்றனர்.
கடல் உள்வாங்கியது உள்ளூர் மக்களுக்கு வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் வெளியூரில் வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர்.