சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரம்: கோவையில் நாளை கேரள அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்
- சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை.
- கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும்.
கோவை:
கோவை காந்திபுரத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
அட்டப்பாடியில் சித்தூர் சாலையில் கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன்மூலம், கோவை மாவட்டத்திற்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை. சிறுவாணி அணையை பராமரிக்க கேரளா அரசுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது.
ஆனாலும், சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்லும் பாதையை சீரமைக்காமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக்குகூட சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்ல முடியாமல், ஆனைக்கட்டி வழியாக சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது.
இந்நிலையில், கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியுள்ளது. தமிழர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். எனவே, கேரளா அரசின் இந்த போக்கை கண்டித்து கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ் நிலையத்தில் நடைபெறும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் வக்கீல் தாமஸ், இந்மிய கம்யூனிஸ்ட் சார்பில் சிவசாமி, ம.தி.மு.க. சார்பில் மாநகர மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், சேதுபதி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் சுசி. கலையரசன், இலக்கியன், வணிகர் சங்கம் சார்பில் மாணிக்கம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இப்ராகீம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சர்புதீன், எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆசிப், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஸ்டான்லி உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.