தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்
- 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
- பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது.
ராமேசுவரம்:
இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் அறியப்படுகிறது.
பரிகாரம் செய்வதற்காகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதனால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை எப்போதும் இருக்கும்.
இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதிகளில் நீண்ட வரிசைகளில் நின்று தரிசனம் செய்தனர்.
பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது. மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பேய்க்கரும்பு, அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை, ராமர்பாதம், கோதண்டராமர் கோவில் ஆகிய பகுதிளிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர்ச்சியாக தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
ராமேசுவரத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.