பா.ம.க வழக்கறிஞர் மீது பொய் வழக்கு: 11-ந்தேதி ஓசூரில் போராட்டம்- ராமதாஸ்
- அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது
- மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான கணல் கதிரவனை, அவருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பொய் வழக்கு ஒன்றில் சூளகிரி காவல்துறையினர் சேர்த்திருக்கின்றனர். அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
வழக்கறிஞர் கணல் கதிரவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கில் இருந்து அவரை நீக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வரும் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் பா.ம.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவருமான வழக்கறிஞர் க. பாலு பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துவார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.