பாசனத்திற்காக காளிங்கராயன் வாய்க்காலில் நீர் திறப்பதில் சிக்கல்- விவசாயிகள் கவலை
- அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
- குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரால் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்கள் காளிங்கராயன் வாய்க்காலில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். பாசனப்பகுதியில் கரும்பு, வாழை, நெல், மக்காச்சோளம், மஞ்சள், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆண்டுக்கு மூன்று போகம் விளைய கூடிய இப்பாசனத்திற்கு அட்டவணைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16-ந் தேதி கண்ணீர் திறக்கப்பட்டு, ஏப்ரல் 30-ம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட வேண்டும்.
இந்த ஆண்டு பவானிசாகர் அணைக்கான நீர் பிடிப்பு பகுதியில் மழை இன்மையாலும், பிற பகுதி மழைநீர் வரத்து இன்றியும், அணை நீர் மட்டம் தொடர்ந்து சரிந்தது. குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையில் நீர்மட்டம் சரிந்ததால் கீழ் பவானி பாசனத்தின் இரண்டாம் போகத்துக்கே தண்ணீர் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் உட்பட அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு குறைந்த அளவு நீர் வரத்தாகி வருகிறது. கடந்த மே மாதம் 15-ந் தேதி அணையின் நீர்மட்டம் 44.35 அடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி 57.71 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தாலும் சில நாட்களாக நீர் வரத்து மீண்டும் குறைந்து விட்டது.
வழக்கமாக இந்த மாதத்தில் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு மேல் இருக்கும். அதனால் காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு 57.71 அடியாக நீர் திறப்பு உள்ளதாலும் அணைக்கான நீர் வரத்து 600 கன அடியாக உள்ளதுடன் தினமும் குடிநீர் தேவைக்கு 150 கன அடி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால் கவலை அளிக்கும் படியே உள்ளது.
இந்த சூழலால் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளதால் காளிங்கராயன் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்தால் மட்டுமே அடுத்த சில நாட்களில் காளிங்கராயன் பாசனத்திற்கும் ஆகஸ்ட் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்களுக்கும் தண்ணீர் வழங்க இயலும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.