தமிழ்நாடு

லாவண்யா

காஞ்சிபுரம் அருகே கோவில் திருவிழா- சாமி ஊர்வலத்தில் சிறுமி உயிரிழப்பு

Published On 2023-03-15 05:45 GMT   |   Update On 2023-03-15 05:45 GMT
  • சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
  • திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி லதா. இவர்கள் தங்களுடைய 3-வது மகள் காஞ்சனாவை சென்னையை சேர்ந்த கூலிதொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்தனர்.

இவர்களது மகள் லாவண்யா (13). மகன் புவனேஷ் (9). இந்த நிலையில் காஞ்சனா குடும்பத்தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்த லாவண்யா 7-ம் வகுப்பும், புவனேஷ் 4-ம் வகுப்பும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விச்சாதாங்கலில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கடைசி நாள் விழா நடைபெற்றது. அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடானது மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.

அப்போது லாவண்யா மாட்டுவண்டியில் அமர்ந்து இருந்தார். திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது. சிறுமி கதறி துடித்தாள். கதறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அனைவரும் உடனடியாக ஜெனரேட்டரின் இயக்கத்தை நிறுத்தி சிறுமி லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News