தமிழ்நாடு (Tamil Nadu)

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு முடித்து வைப்பு

Published On 2023-07-25 09:28 GMT   |   Update On 2023-07-25 11:58 GMT
  • காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்ற தனது தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக நீதிபதி நிஷா பானு கூறினார்.
  • அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்த மனுவை ஏன் நிலுவையில் வைக்க வேண்டும்? என கேள்வி.

சட்டவிரோத பணிப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கின் 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த தீர்ப்பில், ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பில், அமலாக்கத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் இல்லை என்று கூறியிருந்தாலும் கூட, அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியில்லை என்று கூறவில்லை. எனவே காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறையினருக்கு அதிகாரம் உள்ளது.

செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. இந்த இடத்தில், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதோடு, அதில் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படியானது என்று நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

மேலும், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க, இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பரிந்துரைத்திருந்தார்.

இந்த பரிந்துரையை ஏற்று, இரு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி நிஷா பானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்ற தனது தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக நீதிபதி நிஷா பானு கூறினார். அனைத்து அம்சங்களையும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது இந்த மனுவை ஏன் நிலுவையில் வைக்க வேண்டும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி நிஷா பானு, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என கூறி ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தார். 

Tags:    

Similar News