- தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை-குருவாயூர், திருச்சி-திருவனந்தபுரம், நாகர்கோவில்-கோவை ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருதால் ஒருசில இடங்களில் ரெயில்களை இயக்க முடியாத அளவிற்கு தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தென் மாவட்ட பகுதிகளில் இருந்து ரெயில்கள் சென்னைக்கு இயக்க முடியவில்லை.
இதே போல சென்னையில் இருந்து மதுரைக்கு மேல் ரெயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
எழும்பூரில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கொல்லம் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 3 மணிக்கு நெல்லைக்கு புறப்படக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து எழும்பூருக்கு புறப்பட முடியாத நிலை இருந்ததால் ரத்து செய்யப்பட்டன.
அதே போல மாலை 4.05 மணிக்கு புறப்படக்கூடிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்தாகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து எழும்பூருக்கு வரவில்லை. அதனால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.