தமிழ்நாடு

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு எதிரொலி- இட்லி, தோசை, வடை விலை உயரும் அபாயம்

Published On 2022-09-15 06:22 GMT   |   Update On 2022-09-15 06:22 GMT
  • அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவில் இருந்து நெல் வரத்து மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
  • இட்லி, தோசை, வடை மற்றும் மதிய சாப்பாடு போன்ற ஓட்டல் பண்டங்கள் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

சென்னை:

அரிசி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அரிசி விலை 25 கிலோ பைக்கு சராசரியாக ரூ.100 உயர்ந்துள்ளது. தற்போது 25 கிலோ பை ஒன்றின் விலை ரூ.1330 ஆக விற்கிறது.

அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவில் இருந்து நெல் வரத்து மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அரிசி மட்டுமில்லாமல் மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தைவிட சராசரியாக 5 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் மளிகை பொருட்கள் விலை கிலோவுக்கு வருமாறு:-

துவரம் பருப்பு ரூ.118, சிறுபருப்பு ரூ.103, உளுந்தம் பருப்பு ரூ.120, உருட்டு கடலை ரூ.75, கடலை பருப்பு ரூ.72, மிளகாய் தூள் ரூ.400, தனியா தூள் ரூ.325, மஞ்சள் தூள் ரூ.180, சீரகம் ரூ.290, கடுகு ரூ.105, மிளகு ரூ.570, வெந்தயம் ரூ.110.

கோதுமை மாவு (10 கிலோ பாக்கெட்) ரூ.420, மைதா (10 கிலோ) ரூ.410, சர்க்கரை (50 கிலோ) ரூ.1910, வெல்லம் ரூ.60, புளி ரூ.65, பூண்டு (ஊட்டி) ரூ.110, பூண்டு (சாதா) ரூ.80, முந்திரி ரூ.630, திராட்சை ரூ.270.

பாமாயில் (1 லி) ரூ.95, சன்பிளவர் ரூ.130, தேங்காய் எண்ணெய் ரூ.195, நல்லெண்ணெய் ரூ.250, டால்டா ரூ.120, ஏலக்காய் ரூ.1120, நீட்டு மிளகாய் ரூ.330, தனியா ரூ.190, பச்சை பட்டாணி ரூ.75, கருப்பு சுண்டல் ரூ.62.

போக்குவரத்து, வேலை கூலி போன்ற காரணங்களும், இன்னொரு பக்கம் மின் கட்டண உயர்வால் கடை வாடகை உயர்வு ஆகியவற்றால் மளிகை பொருட்கள் விலையையும் சற்று உயர்த்தி விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இட்லி, தோசை, வடை மற்றும் மதிய சாப்பாடு போன்ற ஓட்டல் பண்டங்கள் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:-

வாடகைக்கு 18 சதவீதம், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீதம் என்று ஜி.எஸ்.டி. வரி உள்ளது.

அதே நேரம் அந்த பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு, கார வகைகளுக்கு தனியாக வரிகட்ட வேண்டி உள்ளது. ஒரே பொருளுக்கு பல வரிகள் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பொருள் விலை இறங்கினால் 10 பொருட்கள் விலை ஏறுகிறது. தங்கம் விலையை போல் ஒரு நாளைக்கு ஒரு விலை விற்கிறது. விலைவாசி உயர்வு எங்கள் கைகளை மீறி சென்றுவிட்டது.

எனவே எல்லா உணவு பண்டங்களின் விலையையும் உயர்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். மதிய சாப்பாடு சராசரியாக ரூ.120 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. இதையும் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.

எவ்வளவு விலையை உயர்த்துவது என்று ஆலோசித்து வருகிறோம். மின்கட்டணம் உயர்கிறது. கடை வாடகை உயர்கிறது.

பெரும்பாலும் எல்லோருக்கும் இரண்டாவது தாய்வீடு மாதிரி உணவகங்கள் உள்ளன. இட்லி விலை சாதாரணமாக ரூ.15 முதல் ரூ.30 வரை உள்ளது. அரிசி, மளிகை விலை உயர்வால் இட்லி, தோசை, வடை, பொங்கல் போன்ற அனைத்து உணவு பண்டங்களின் விலையும் சற்று உயரத்தான் செய்யும்.

30 ரூபாய்க்கு 3 வகை சட்னி, சாம்பாரோடு ஒரு இட்லியை விற்க முடியவில்லை. ஆனால் சிறிதளவு மைதா மாவில் தயாராகும் ஒரு பீட்சாவுக்கு ரூ.350 கொடுத்து சாதாரணமாக வாங்கி சாப்பிடுகிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. அவர்களுக்கு கூடுதல் வரி போடலாம்.

நம் நாட்டு பாரம்பரியமான, ஆரோக்கியமான உணவு பழக்கங்களை காப்பாற்ற அரிசி, மளிகை, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. விலை உயரும் பட்சத்தில் அரசே விவசாயிகளுக்கு மானியம் தருகிறது. எதற்கெல்லாமோ இலவசம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News