நீட் வினாத்தாள் லீக் ஆனது உண்மை தான்.. ஆனால் நிறைய பேருக்கு கிடைக்கல.. அண்ணாமலை
- நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
- நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.
இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், "நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமையாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி நீட் தேர்வில் எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்ய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "நீட் வினாத்தாள் கசிவு குறித்து மெட்ராஸ் ஐஐடி ஆய்வு நடத்தியது. கசிந்த நீட் வினாத்தாள் சிலருக்கு மட்டும் தான் கிடைத்துள்ளது. பலருக்கு கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூட வினாத்தாள் கசிவு பரவலான அளவில் நடைபெறவில்லை என்று கூறியுள்ளது. ஆகவே மிகச்சிறிய அளவில் தான் நீட் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.