தமிழ்நாடு

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சேலத்தில் இருந்து 51 பேர் பயணம்

Published On 2022-11-20 07:22 GMT   |   Update On 2022-11-20 07:22 GMT
  • தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரெயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது.
  • பா.ஜனதா கட்சி மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

சேலம்:

காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பழமையான கலாசார தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் விழா ஒரு மாத காலத்திற்கு கொண்டாடப்படுகிறது.

சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இவ்விழாவை மத்திய அரசின் கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகங்கள் மற்றும் உத்திரபிரதேச அரசு முன்னெடுத்துள்ளது.

காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரெயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரெயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வகையில், சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர்.

சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு வந்த காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலத்தில் இருந்து 51 பேரும் புறப்பட்டனர். அவர்களை பா.ஜனதா கட்சி மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News