கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
- பயணிகள் வரும் நாட்களில் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி எளிதாக வந்து செல்ல முடியும்.
- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அழகிய நீரூற்றுகளுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்ட வரப்பட்டு உள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு மின்சார ரெயில்களில் எளிதில் வந்து செல்லும் வகையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே பஸ் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ரூ.74.5 கோடி மதிப்பில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த நடைபாதை சுமார் 140 மீட்டர் நீளத்தில் ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே வருகிறது. 8 மீட்டர் அகலத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும் லிப்ட், நகரும் படிக்கட்டு வசதிகளும் வருகின்றன.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்-ரெயில் நிலையம் இடையே ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா இன்று காலை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு நடைமேம்பால பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த பணியை அடுத்த 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய ரெயில்நிலையம் அமையும்போது நடை மேம்பாலம் பணியும் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராகி விடும். எனவே பயணிகள் வரும் நாட்களில் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி எளிதாக வந்து செல்ல முடியும்.
இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அழகிய நீரூற்றுகளுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பணி முழுவதும் முடிந்ததை தொடர்ந்து இந்த புதிய பூங்காவையும் அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இந்த பூங்காவில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகள், அலங்கார பூச்செடிகள், அமரும் பலகைகள், நீரூற்று, சதுரங்க சிற்பங்கள், பாறை பூங்கா, சிறிய குளம், கால்வாய்கள், இரவு நேரங்களில் வண்ண மயமான விளக்குகள் கண்ணை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, கிளாம்பாக்கம் பஸ் நிலைய தலைமை செயல் அதிகாரி பார்த்திபன், சி.எம்.டி.ஏ. செயற்பொறியாளர் ராஜன் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.