தவறான சிகிச்சையால் காலை இழந்த கல்லூரி மாணவிக்கு அரசு வேலை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
- பாதிக்கப்பட்ட மாணவிக்கு பெங்களூருவில் இருந்த செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும்.
- தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த தவறான ஆப்ரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.