தமிழ்நாடு (Tamil Nadu)

மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும்- அமைச்சர் உதயநிதி பேச்சு

Published On 2024-09-26 07:49 GMT   |   Update On 2024-09-26 07:49 GMT
  • அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி.
  • 75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி.

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உருவசிலையுடன் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கலைஞர் கோட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி உருவ சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கலைஞரின் கோட்டத்தை கும்பகோணத்தில் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

கும்பகோணம் தி.மு.க.வின் மண் என்பது கருணாநிதிக்கு மட்டும் அல்ல, இந்தி எதிர்ப்பு போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என தஞ்சையில் நீலமேகம் தலைமையில் சிறப்பாக நடத்திக்காட்டினர். அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி. தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறையிலும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.

75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியவர். தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வழிகாட்டி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேலும் மகளிர் உரிமை திட்டம் அனைத்து தகுதி உள்ள மகளிர்களுக்கும் கிடைக்கும்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக பணியாற்றி மீண்டும் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News