ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. தமிழக முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்
- ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்
சென்னை:
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றதுடன், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொண்டார்.
அந்த வகையில் இன்று ஜப்பானின் டோக்கியோவில் உள்ள முன்னணி நிறுவனமான ஓம்ரான் ஹெல்த்கேர் இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலையை நிறுவிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் அம்மு ஒகடா, செயல் அலுவலர் கசுகோ சூரியாமா, ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் (வியட்நாம்) தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாகுடோ இவனாகா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.