முத்துக்குழி வனப்பகுதியில் விடப்பட்டது: அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
- யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர்.
- உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
நெல்லை:
தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் சண்முகநதி அணைப்பகுதியில் சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிப்பட்ட அரிசி கொம்பன் யானை சாலை மார்க்கமாக நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.
மணிமுத்தாறு வன சோதனை சாவடியில் இருந்து மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக மேல கோதையாறு அணையில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் முத்துக்குழி வயல் என்ற வனப்பகுதிக்கு அரிசி கொம்பன் யானை கொண்டு செல்லப்பட்டது.
அங்கு யானைக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு ஏற்ற சாத்திய கூறுகள் இல்லாததால் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இன்று அதிகாலை வனப்பகுதியில் விடப்பட்டது.
மேலும் அதன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதினால் அதனை 2 நாட்கள் காணிப்பதற்காக வனத்துறையினர் அங்கு முகாமிட்டு அதன் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே முத்துக்குழி வயல் பகுதியில் யானை வழித்தடம் இருப்பதினாலும், அந்த வழித்தடம் அதன் பூர்வீக இடமான கேரளா வனப்பகுதிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அதன் வழியாக அரிசி கொம்பன் கேரள மாநிலத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.