கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் சிறப்பு மலர் அலங்காரம்
- பல லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
- கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் கோலங்கள் போடப்பட்டும், விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டும் இருந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 17-ந்தேதி முதல் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த கோடைவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து சிறப்பித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தினந்தோறும் வெவ்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இன்று மலர் கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக மலர் வழிபாடு நடைபெற்றது. இதில் முருகன் தேரில் இருப்பது போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக அமைந்திருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் கோலங்கள் போடப்பட்டும், விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டும் இருந்தது.
இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.