தமிழ்நாட்டில் 3 நாட்களாக நடந்த வேட்டையில் கள்ளச்சாராய வியாபாரிகள் 2,461 பேர் கைது
- கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
- 3-வது நாள் நடந்த சோதனையில் திருட்டுதனமாக விற்கப்பட்ட 17ஆயிரத்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை:
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து இதுவரை 19 பேர் இறந்து விட்டனர். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கினார்கள். இதனால் கடந்த 3 நாட்களில் இது தொடர்பாக 2,466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 2,461 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பெண்களும் அடங்குவார்கள். 2 நாட்களில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட 16,493 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது. 3-வது நாள் நடந்த சோதனையில் திருட்டுதனமாக விற்கப்பட்ட 17ஆயிரத்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2,583 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.
சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கரவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து போலீசார் கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க வேட்டை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திரபாபு கூறும் போது, "தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இந்த நடவடிக்கைகள் தொடரும்" என்று தெரிவித்தார்.