தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2024-05-23 05:43 GMT   |   Update On 2024-05-23 05:43 GMT
  • கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
  • தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது.

பவானிசாகர்:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கனஅடிக்கு குறைவாக வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று பவானிசாகர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,672 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 47.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டு வந்த 200 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலுக்கு மட்டும் 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் பலத்த மழை காரணமாக உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 36.10 அடியாக உள்ளது. இதே போல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 23 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள், குளம் குட்டைகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News