சென்னை அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் திடீர் போராட்டம்- தீக்குளிக்க போவதாக மிரட்டல்
- வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது.
- சென்னைக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் 4½ நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
பேரணாம்பட்டு:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது.
இந்தப் பணிமனையில் இருந்து வாரத்தில் 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை சென்னைக்கு காலை 5 மணிக்கு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல காலை 5 மணிக்கு சென்னைக்கு புறப்பட வேண்டிய பஸ் பணி மனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பஸ்சை இயக்க வேண்டிய பேரணாம்பட்டு அடுத்த வேப்பனேரியை சேர்ந்த டிரைவர் தேவராஜ். பள்ளிகொண்டாபட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்டக்டர் பாபு வரவில்லை.
அவர்களை கிளை மேலாளர் வெங்கடேசன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அவர்கள் அழைப்பை எடுக்காததால் சக பணியாளர்கள் பஸ்சை இயக்கினர்.
இந்த நிலையில் இன்று காலை தேவராஜ், பாபு பணிக்கு வந்தனர். அப்போது சென்னை பஸ்சை இயக்க சென்றனர்.
தேவராஜும், பாபுவும் அந்த பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் மண்ணெண்ணெய் எடுத்து வந்து தீக்குளிக்க போவதாக கூறி பஸ்சின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேரணாம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்ட கண்டக்டரிடமும், டிரைவரிடமும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
உங்களுடைய பணி குறித்து ஏற்கனவே நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டுள்ளது நீங்கள் வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பஸ்சை இயக்க வேண்டும் என விளக்கி கூறினர்.
இதில் சமாதானம் அடைந்த டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து சென்றனர்.
இதனால் இன்று காலை 5 மணிக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய அரசு பஸ் 4½ நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
இந்தச் சம்பவம் பணிமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.