திருச்சி விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்
- திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
- கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் உருமாறிய ஒமைக்ரான் பிஎஃப்7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணைக்குழுமம் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின்படி திருச்சி விமானநிலையத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து விமான நிலைய மருத்துவர்கள் குழுவினர் இன்று (24-ந்தேதி) நள்ளிரவு முதல் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதேபோல மத்திய அரசு உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று காலை 10 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.