5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100 சதவீத பரிசோதனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது.
- ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல.
திருச்சி:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்மைக்காலமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் துறையின் அலுவலர்களுடனான கூட்டத்தை நடத்தி அதில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார்.
அந்த வகையில் சர்வதேச விமானங்களில் வருபவர்களை கடந்த காலங்களில் 2 சதவீதம் பரிசோதனை தொடர்ந்திட வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதன்படி திருச்சி, மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீனா, தைவான், ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா போன்ற ஐந்து நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகளுக்கு 100 சதவீத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் புதிய கலாச்சாரம் ஒன்று தலைதூக்கியுள்ளது. பிளட் ஆர்ட் என்ற ரத்தத்தை எடுத்து ஓவியம் வரைந்து விரும்புவர்களுக்கு அனுப்புவது, குறிப்பாக காதலர்களுக்குள் அனுப்புவது போன்ற பழக்கம் புதியதாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ரத்ததானம் என்பது பல உயிர்களை காக்க பயன்படுகிறது. எனவே அந்த ரத்தத்தை வைத்து ஓவியம் வரைவது சரியான அணுகுமுறையல்ல. இது முறையாக பாதுகாப்பு இல்லாத ஒன்றாகும்.
அந்த ரத்தத்தை படம் வரைவதற்கு கையாளும் போது, அந்த ரத்தம் எச்.ஐ.வி. போன்ற நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்களிடமிருந்து எடுக்கப்பட்டால் அது பலரை தாக்கி, பாதிப்பிற்குள்ளாக்கும். எனவே இந்த தகவல் தெரிந்தவுடன் நேற்றைக்கு சென்னையில், வடபழனி மற்றும் தியாகராயநகர் பகுதியில் இருக்கின்ற பிளட் ஆர்ட் நிறுவனங்களில் நமது மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.
அங்கிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுளளது. இதோடு இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் நிறுவனம் அல்லது கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தடைவிதிக்கப்படுகிறது. இதை யாராவது மீறினால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
முகக்கவசம் அணிவது, சானிடைசர் உபயோகிப்பது தனிமனித இடைவெளி பின்பற்றுவது என்பது கொரோனா விதிமுறைகளுள் ஒன்றுதான். அது இன்னும் நீக்கப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு என்பது உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருப்பதால் முகக்கவசம் அணிவது அவரவர் உயிரை அவரே பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
பி.எ.5 என்கின்ற வைரஸின் உள்உருமாற்றம் பி.எப்.7 ஆகும். இது எந்த அளவிற்கு பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தும் என்பதை தற்போது கணிக்க முடியாது. ஆனால் சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி பல உயிர்கள் பிரிய காரணமாக உள்ளது.
ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை முதலமைச்சர் தடுப்பூசி போடும் பணியினை ஒரு இயக்கமாகவே மாற்றிய காரணத்தினால் முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதத்தையும், 2-ம் தவணை 92 சதவீதத்தையும் தொட்டிருக்கிறது. பூஸ்டர் தவணை தடுப்பூசி கையிருப்பு இருந்தவரை போடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி என்பது தமிழ்நாட்டில் 90 சதவீதம் தொட்டிருக்கிறது. எனவே கடந்த 6 மாதங்களாக கொரோனாவிற்கான உயிர்இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை, பாதிப்பும் 10 என்ற எண்ணிக்கையின் கீழே நிலவிக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.