தமிழக மக்களின் மகிழ்ச்சியே முக்கியம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- சென்னையில் பட்டா பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது.
- மூன்று மாதத்திற்கும் பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதியை செயல்படுத்தி உள்ளார்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் தொகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாமல் இருந்த பொதுமக்கள் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை ஏற்று உடனடியாக அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதல் கட்டமாக 2 ஆயிரத்து 100 குடும்பங்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைய செய்த மக்களுக்கும் கழகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கலைஞர் ஆட்சி காலத்தில் 1970-ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கினார்.
இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.920 கோடி செலவில் 60 குடியிருப்புகளை ஆன்லைன் மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் வடசென்னை பகுதியில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
பட்டா வேண்டும் என்ற பல வருட கனவு இன்றைக்கு நிறைவேறியுள்ளது. சென்னையில் பட்டா பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. மூன்று மாதத்திற்கும் பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் வாக்குறுதியை செயல்படுத்தி உள்ளார்.
எத்தனை சிக்கல் வந்தாலும் பரவாயில்லை. மக்களுடைய மகிழ்ச்சிதான் முக்கியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
முதலமைச்சர் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தொகை வழங்கப்படுகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை பெறுகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒரு கோடியே 46 லட்சம் பெண்கள் பயன் பெறுகிறார்கள். தரமான கல்வி, சுகாதாரம் என்று இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளோம்.
அரசின் பிராண்ட் அம்பாசிடர் மக்களாகிய நீங்கள்தான். இந்த அரசை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம் ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், எபினேசர், துணை மேயர் மகேஷ் குமார், மண்டலக் குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம், பகுதி செயலாளர் அருள்தாசன், பூச்சி முருகன், புழல் ஒன்றிய செயலாளர் வக்கீல் சரவணன், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த், சிறப்பு அதிகாரி மதுசூதன் ரெட்டி, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.