தமிழ்நாடு

மயிலாடுதுறையில் நேற்று மதியம் முதல் சிறுத்தை நடமாட்டம் பதிவாகவில்லை- கூண்டுகள் அமைத்து வனத்துறை தீவிரம்

Published On 2024-04-10 05:19 GMT   |   Update On 2024-04-10 05:19 GMT
  • சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.
  • காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

குத்தாலம்:

மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

பின்னர் அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலம் அருகே காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரியவந்தது. இதே தொடர்ந்து 7 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு பணிகளில் பகுதிகளில் இருந்து வந்துள்ள நிபுணர்கள், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் தெர்மல் ட்ரோன் கேமரா, தானியங்கி கேமராக்கள், மோப்ப நாய்கள், வேட்டை நாய்கள் உதவியுடன் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கண்காணித்து சிறுத்தையை கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிவாய் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் சிறுத்தையின் எச்சம் கால் தடம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது:-

சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

இதுகுறித்து பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை காஞ்சிவாயை அடுத்த கருப்பூர் அருகே நண்டல ஆற்றின் அருகில் சிறுத்தையின் எச்சம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிறுத்தை இடமாற்றம் அதன் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை குறித்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என்றார்.

இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இன்று 8-வது நாளாக தொடர் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மேலும் தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ்.புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதிகளில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எஸ்.புதூரில் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News