ஊத்துக்குளி அருகே லஞ்சம் வாங்கி கைதான ஊராட்சி தலைவர்-செயலர் சிறையில் அடைப்பு
- லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
- 2 பேரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டாரம், சுண்டக்காம்பாளையத்தை சோ்ந்தவா் ராதா கிருஷ்ணன். இவா் மக்காச்சோள அரவை ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில் கட்டிட விரிவாக்க பணிக்காக சுண்டக்காம்பாளையம் ஊராட்சித்தலைவா் ஆனந்த் என்ற லோகநாதனை தொடா்பு கொண்டுள்ளாா்.
அவா், கட்டிட அனுமதிக்கு ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். மேலும் முன் பணமாக ரூ.2.30 லட்சம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.
இதையடுத்து ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை ராதாகிருஷ்ணன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கெளசல்யா தலைமையிலான போலீசார் ஊராட்சித் தலைவா் லோகநாதன் (வயது 43), ஊராட்சி செயலா் அமிா்தலிங்கம் (35) ஆகியோரை பிடித்தனா்.இதையடுத்து 2 பேரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.