படிக்க முடியாமல் மாணவி தற்கொலை- சாதி சான்று கேட்டு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
- இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
- வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டியல் இன எஸ்.சி சாதி சான்று கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.
பன்னியாண்டி சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து, திருவண்ணாமலை போலீசார் மாணவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.
என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டி சங்கத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில்:-
பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 12-ம் வகுப்பில் 367 மதிப்பெண் பெற்றும், சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேல்படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக பட்டியலென எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றார்.