ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டிசம்பரில் தமிழகம் வருகிறார்
- குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது.
- தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை:
'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தாவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.
அங்கிருந்து நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி.,-ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைந்த செலவில் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. அதனால் பல நாடுகளும் இஸ்ரோ வாயிலாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன.
இதற்காக மேலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தது.
இதில் குலசேகரப்பட்டினம் தேர்வானது. புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இந்த ஊர் அமைந்திருப்பதும் தட்பவெப்ப சூழல் ராக்கெட் ஏவுதளம் இயங்குவதற்கு சாதகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
இதற்காக குலசேகரபட்டினம் அருகில் உள்ள கூடல் நகர் அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் 2,230 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது இந்த இடங்களை சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு ரூ.6 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தற்போது குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்து விட்டது. இதற்கு தேவைப்படும் நிலம் முழுவதும் கிடைத்து விட்டதால் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி டிசம்பர் மாதம் குலசேகரபட்டினம் வருகிறார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. மாநில அரசும் தேவையான நிலத்தை கையகப்படுத்தி தந்து விட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சிறிய ரக ராக்கெட் ஏவுவதற்கு வசதியாக ஏவுதளம் அமைக்கப்படுகிறது.
பிரதமர் மோடி டிசம்பர் மாதம் வருகை தந்து அடிக்கல் நாட்டி இதை தொடங்கி வைக்க உள்ளார். அவர் வருவதற்கு முன்பே தற்காலிக ஏவுதளம் அமைத்து சிறிய ரக குறைந்த எடை கொண்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட் ஏவுவதை பிரதமர் பார்வையிடும் வகையில் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் கடந்த வாரம் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து இது பற்றி விளக்கி கூறி உள்ளார்.
இதேபோல் ராமேசுவரத்தில் பாம்பன் இடையே புதிய ரெயில்வே தூக்கு பாலம் உள்ளதால் அந்த பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தூர்தன்ஷன் தொலைக்காட்சியின் புதிய சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. அதையும் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.